Tuesday, May 26, 2020

திண்டுக்கல் பூட்டு

#திண்டுக்கல்_பூட்டின்_வரலாறு..

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார்.

வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளைசெய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

#டிலோ பூட்டு..
திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

#பெல் லாக்..
இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும்போதும், திறக்கும்போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

#லண்டன் லாக்..
ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை எவ்வளவு தெரியுமா?
22 கிலோ!!!!!

நன்றி திரு  Chockalingam Raman அய்யா

Monday, May 11, 2020

மாவட்டச்சிறப்பு பெயர்கள்


எழுதியதை அச்சாக்க...

[11/05, 12:15 PM] Kanichelvi: Google Lens மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் டிஜிட்டலாக மாற்ற முடியும் என்பது சிலருக்கு அதிசயமாக தான் இருக்கும். உங்கள் ஸ்மார்ட் போன் கேமரா உதவியுடன் கூகிள் இதை நடைமுறைப்படுத்தி சாத்தியமாக்கியுள்ளது. கையால் எழுதிய வார்த்தைகளைக் காப்பி பேஸ்ட் செய்வது மட்டுமின்றி இதை உங்கள் கணினியில் டிஜிட்டல் வடிவத்திற்கும் மாற்றம் செய்து சேவ் செய்துகொள்ளலாம். இதை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கூகிள் நிறுவனம் அதன் கூகிள் லென்ஸ் பயன்பாட்டில் புதிய அம்சத்தைக் உருவாக்கியுள்ளது, இந்த புதிய அம்சம் குறிப்பாக மாணவர்களுக்கு மற்றும் காகிதத்தில் உள்ள வார்த்தைகளை டிஜிட்டல் வடிவமாக மாற்ற வேண்டும் என்ற தேவைக்கொண்ட அனைவருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. கையால் எழுதப்பட்ட குறிப்புகளை ஸ்கேன் செய்து அதை டிஜிட்டல் வடிவத்திற்கு நொடியில் இந்த புதிய அம்சம் மாற்றிவிடுகிறது.
காகிதத்தில் கையால் எழுதப்பட்ட வாக்கியங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றம் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது என்பதுடன், நீங்கள் கூகிள் லென்ஸ் கேமரா மூலம் ஸ்கேன் செய்த எழுத்துக்களில் உங்களுக்குத் தேவையான குறிப்புகளையும் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. நீங்கள் தேர்வு செய்து வார்த்தைகளை காப்பி செய்து, அதை உங்கள் கணினியில் எங்குவேண்டுமானாலும் நீங்கள் பேஸ்ட் செய்துகொள்ளவும் அனுமதிக்கிறது.
கூகிள் லென்ஸ் அம்சம் கொண்ட பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல், ஆப்பிள் ஐபோன் பயனர்கள் தங்களுக்குத் தேவையான கூகுள் லென்ஸ் பயன்பாட்டை அப்பிளின் ஆப் ஸ்டார் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்களிடம் கூகிள் லென்ஸ் பயன்பாடு இல்லையென்றால், நீங்கள் Google பயன்பாட்டிலிருந்தும் இந்த அம்சத்தை அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கையால் எழுதிய குறிப்புகளை எப்படி டிஜிட்டல் முறைக்கு மாற்றி காப்பி பேஸ்ட் செய்வது?
*நீங்கள் காகிதத்தில் எழுதியுள்ள கையெழுத்து குறிப்புகளை நோக்கி உங்கள் கூகிள் லென்ஸ் கேமராவை காட்டவும்.
 *கையால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்கு நேராக கேமராவை வைத்து ஒரு புகைப்படத்தை எடுக்கவும்.
ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்திலிருந்து நீங்கள் மாற்ற விரும்பும் குறிப்புகளை இப்பொழுது தேர்ந்தெடுக்கவும்.
* பின்னர் கீழே தோன்றும் copy to computer விருப்பத்தை கிளிக் செய்யவும்.
*தற்பொழுது நீங்கள் தேர்வு செய்த உங்கள் குறிப்புகள் உங்கள் கணினியில் நகலாக மாட்டப்பட்டிருக்கும்.
*இதை இப்பொழுது இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

Wednesday, May 6, 2020

எண்ணெய்

#எண்ணெய்

ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்?

'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்பது பழமொழி. நல்ல பொருள்களை வியாபாரியிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தாமல் நோய்களை வரவழைத்துவிட்டு அதன்பிறகு வைத்தியனிடம் போய் நோய்க்காக பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்பதே அதன் பொருள். அந்த வரிசையில் அந்தக்காலத்தில் வாணியன் என்று சொல்லப்படுபவர்கள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் விற்கும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தரமானவையாக இருந்ததோடு ஆரோக்கியம் காக்கக்கூடியவையாக இருந்தன. சுத்தமான செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவதன்மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் எந்த ஒரு நோயும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும். ஊட்டச்சத்துள்ள எண்ணெய்களைப் பயன்படுத்தியதால்தான், நம் முன்னோர் நோய் நொடி எதுவும் அண்டாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.

நம் வாழ்வில், எண்ணெயின் பங்கு இன்றியமையாததாகி விட்டது. நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் பெரும்பாலும் எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. மொறுமொறு வடை, முறுகலான தோசை, போண்டா, பஜ்ஜி என நாவுக்கு ருசி தரும் உணவுகள் அனைத்துமே எண்ணெயில் தயாரிக்கப்படுபவையே. இதைக்கண்ணுற்ற நம்மில் பலர்... இதை எந்த எண்ணெயில் செய்தார்களோ, எத்தனை நாள் ஆனதோ என்று கருத்துச் சொல்லிகள் விளம்பினாலும் நாம் நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் எண்ணெய்கள் மட்டும் ஆரோக்கியமானதா? என்று கேட்டால் அதுவும் கேள்விக்குறியே.

அன்றாடச் சமையலில் நாம் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயில்களில் எந்தவொரு உயிர்ச்சத்துகளும் இல்லை. அதற்குக் காரணம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறையே. ஆம், கம்பெனிகளில் எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்களில், எண்ணெயை மட்டும் பிரித்து எடுப்பதில்லை. அதில் உள்ள உயிர்ச்சத்துகளையும் சேர்த்தே பிரித்து எடுத்து விடுகிறார்கள். அதிகமான வெப்பத்தில் எந்திரங்கள் எண்ணெயை பிரித்தெடுப்பதால் அது முழுமையான ரசாயனத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இதைப் பயன்படுத்துவதால் நமக்கு ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன், புற்றுநோய் போன்றவை வர வாய்ப்புள்ளது. ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் எனப்படுவது இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை, அதன் கொழகொழப்புத் தன்மையை, தேவையான கொழுப்புச்சத்தை நீக்குவதே. ஆகவே, இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு செக்கில் ஆட்டப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவதே.

செக்குகள் பெரும்பாலும் மரம் மற்றும் கல்லால் செய்யப்படக்கூடியவை. முற்காலங்களைப்போல மாடுகளைக்கொண்டு இயக்கப்பட்ட செக்குகள் இப்போது மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. குறைந்த திறன் கொண்ட மோட்டார்களே போதுமானது. இவை அதிகமான வெப்பத்தை வெளியிடுவதில்லை. இதன்மூலம் ஆட்டப்படும் எண்ணெயில் உயிர்ச்சத்துக்கள் அப்படியே இருக்கும். செக்குகளில் அரைத்துப் பெறப்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. மேலும் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகிய சத்துகள் உள்ளன.

இந்தத் தாதுப்பொருட்கள் நம் கை, கால் மூட்டுகளுக்குச் சென்று எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியவை. எலும்பு தேய்மானத்தைத் தடுக்கக்கூடியவை. செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நல்ல நிறமாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். மேலும் கொழகொழப்பாகவும் காணப்படும். இதனால் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைக் கொடுக்கக் கூடியது.

செக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

விளக்கெண்ணெய் குடலை சுத்தப்படுத்தும்.

நல்லெண்ணெய் முதுமையைத் தாமதப்படுத்தும். மூலம், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளைப் போக்கக்கூடியது. உடலுக்கு உறுதியைத் தரக்கூடியது. பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருப்பதாலே எள் எண்ணெய் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது `குயின் ஆஃப் ஆயில்' என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் எள் ஆட்டப்படும் போது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து ஆட்டப்படும். இது செக்கை அதிக வெப்பமாக்க விடாது, மேலும் இனிப்புச் சுவையையும் கொடுக்கும்.

செக்கு எண்ணெய் வாங்கும்போது நாம் சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். செக்குகளில் இரும்புச் செக்கும் உண்டு. இரும்புச் செக்கும் வெப்பமடையும் தன்மை கொண்டது. பெரும்பாலும் மரச்செக்குகளில் தயாரிக்கும் எண்ணெயை வாங்குவது நலம்.

தேங்காய் கொப்பரைகள் கெட்டுப் போகாமல் இருக்க சிலர் சல்ஃபரை பயன்படுத்துவதும் உண்டு. இதையும் விசாரித்து வாங்குதல் நலம். “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே“ என்பது திருமூலரின் பாடல். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன்மூலம் நாம் உயிரை வளர்க்க முடியும். நாம் உண்ணும் உணவே நம் உடலின் ஆரோக்கியத்தைத்  தீர்மானிக்கிறது. நாம் பயன்படுத்தும் எண்ணெய்களே நம்  உணவின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. நல்ல தரமான எண்ணெயைப் பயன்படுத்துவோம்! நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்!